வங்காளதேசத்திற்கு எதிரான டி20; இவர்கள்தான் புதிய தொடக்க ஆட்டக்காரர்கள் - சூர்யகுமார் யாதவ்

அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார்.

Update: 2024-10-06 03:21 GMT

Image Courtesy: @BCCI

குவாலியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பும்ரா, சிராஜ், பண்ட், கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் களம் இறங்குவார்கள் என ரசிகர்களிடையே கேள்வி எழும்பி உள்ளது.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி முன்னோக்கிச் செல்வார். குவாலியரில் நாங்கள் 2 - 3 நாட்களாக பயிற்சி செய்து வருகிறோம். இங்கே மைதானம் ஸ்லோவாக இருப்பதாக தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டுக்கு உகந்த ஆடுகளமாகவே தெரிகிறது.

எனவே இங்கே நல்ல போட்டியை எதிர்பார்க்கிறேன். பயிற்சி எடுக்கும் போது இங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். எனவே பிட்ச் எப்படி இருக்கும் என்ற ஐடியா கிடைத்துள்ளது. காற்றின் வேகம் மற்றும் பனியின் தாக்கம் போன்றவற்றைப் பற்றி மைதான பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்தோம். நாங்கள் எங்களுடைய திட்டங்களை பின்பற்ற உள்ளோம். அனைவரும் தங்களுடைய வேலைகளில் அசத்தினால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்