டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக உலக சாதனை படைத்த இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 219 ரன்கள் குவித்தது.
செஞ்சூரியன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தையும் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் இந்தியா 8 முறை 200+ ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக முறை 200+ (8) ரன்கள் அடித்த முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்னர் பர்மிங்காம் பியர்ஸ் (2022), இந்தியா (2023) மற்றும் இந்தியா (2023) ஆகிய அணிகள் தலா 7 முறை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள இந்தியா முதல் அணியாக உலக சாதனையை படைத்துள்ளது.