நாட்டுக்காக சதம் அடிக்க உதவிய அவருக்கு நன்றி - ஆட்ட நாயகன் திலக் வர்மா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் திலக் வர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
செஞ்சூரியன்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா (107 ரன்கள்) சதமடித்து அசத்தினார்.
பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த போட்டியில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய திலக் வர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவுக்காக சதமடிக்க வேண்டும் என்ற தம்முடைய பெரிய கனவு நிஜமாகியுள்ளதாக திலக் வர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "இது மிகவும் கடினமான வாய்ப்பு. ஆனால் நாங்கள் போட்டியை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. அதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். இந்த சதம் சரியான நேரத்தில் வந்துள்ளது. இதற்கான அனைத்து பாராட்டுகளும் என்னுடைய கேப்டன் மிஸ்டர் சூர்யகுமார் யாதவையே சேரும். அவர் 3வது இடத்தில் எனக்கு வாய்ப்பை கொடுத்து சுதந்திரமாக விளையாடுமாறு கூறினார்.
அவருக்கு மீண்டும் நன்றிகள். நான் என்னுடைய அடிப்படைகளை பின்பற்றினேன். ஆரம்பத்தில் பிட்ச் இரண்டு விதமாக இருந்தது. அதனால் அபிஷேக் ஷர்மா அவுட்டான பின் புதிய பேட்ஸ்மேன்கள் அதில் அதிரடியாக விளையாடுவது எளிதாக இல்லை. இருப்பினும் பார்ட்னர்ஷிப் அமைத்து நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன்" என்று கூறினார்.