தோனி - ரோகித் கேப்டன்ஷிப் வித்தியாசம் குறித்து பேசிய ஹர்பஜன்

ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரிடம் உள்ள கேப்டன்ஷிப் வித்தியாசங்கள் குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

Update: 2024-09-03 03:58 GMT

மும்பை,

நவீன கிரிக்கெட்டில் மகேந்திரசிங் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்தியாவின் சிறந்த கேப்டன்களாக போற்றப்படுகின்றனர். அதில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அதனால் தோனிக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

மறுபுறம் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி வரலாறு படைத்துள்ளார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித்தை விட சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனி 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரிடம் உள்ள கேப்டன்ஷிப் வித்தியாசங்கள் குறித்து இருவரது தலைமையிலும் விளையாடிய ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தோனி மற்றும் ரோகித் ஆகியோர் வித்தியாசமான கேப்டன்கள். எம்எஸ் தோனி எப்போதும் வீரர்களிடம் சென்று என்ன பீல்டிங் வேண்டும் என்று கேட்க மாட்டார். அவர் உங்களை தவறிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளச் சொல்வார். ஒருமுறை ஐபிஎல் தொடரில் நான் ஷார்ட் பைன் லெக்கில் பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். தோனி கீப்பிங் செய்து கொண்டிருந்தார். ஷர்துல் தாக்கூர் பந்து வீசினார். அவருடைய பந்தில் முதல் பந்திலேயே கேன் வில்லியம்சன் நேராக பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் மீண்டும் அவர் அப்படியே வீசியதால் வில்லியம்சன் அதே போன்ற ஷாட் அடித்தார்.

அப்போது எம்.எஸ். தோனியிடம் சென்ற நான் வேறு லென்த்தில் வீசுமாறு தாக்கூரிடம் சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு தோனி என்னிடம், 'பாஜி அவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் பின்னர் அவர் எப்போதும் கற்றுக் கொள்ள மாட்டார். எனவே அவரை தமக்குத் தாமே கற்றுக் கொள்ள விடுங்கள்' என்று கூறினார். அதாவது தாக்கூர் பவுண்டரிகளால் அடி வாங்கினால் அதிலிருந்து வேகமாக கற்றுக் கொள்வார் என்று தோனி கருதினார். அதுதான் எம்எஸ் தோனியின் வழியாகும்.

ரோகித் வித்தியாசமானவர். அவர் ஒவ்வொருவரிடமும் பேசுவார். வீரர்களின் தோள் மீது கை போட்டு ஆதரவு கொடுக்கக்கூடிய அவர் நீங்கள் என்ன செய்ய வேண்டும், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பற்றி சொல்லிக் கொடுப்பார். நம்மால் முடியும் என்ற முழு நம்பிக்கையை அவர் நம்மிடம் ஏற்படுத்துவார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்