இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகும் மோர்னே மோர்கல்? - வெளியான தகவல்

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மோர்னே மோர்கல் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-07-29 15:24 GMT

Image Source : PTI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான தொடரை அடுத்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் இந்திய மண்ணில் நடைபெறுகிறது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய அணிக்கு தற்போது வரை பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தொடருக்காக இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டபோது மோர்னே மோர்கல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்