கவாஜா அபார பேட்டிங்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்
ஆஸ்திரேலிய அணி 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்திருந்தது. அந்த அணியில் கவாஜா 251 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையிலும், கிரீன் 64 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 2வது நாளான இன்று பேட்டிங் செய்த இந்த இணை இந்தியாவின் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை திரட்டியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 150 ரன்களை கடந்தார். இதற்கிடையில் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய 23 வயதான கேமரூம் கிரீன் சர்வதேச அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.
அவர் 114 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அலெக்ஸ் கேரியும் அவுட்டானார். ஸ்டார்க் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நங்கூரம் போல் நின்று நிதான பேட்டிங் செய்துவரும் கவாஜா, இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில் 180 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நாதன் லயன் 34 ரன்களும், மர்பி 41 ரன்களும் எடுத்து அணியில் ஸ்கோர் உயர உதவினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.