சேப்பாக்கம் மைதான வரலாற்றில் இடம் பிடித்த இந்தியா - வங்காளதேசம் 2-வது நாள் ஆட்டம் - விவரம் இதோ

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-20 13:07 GMT

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 2வது நாளான இன்று 2 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இது சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு நாளில் வீழ்ந்த அதிகபட்ச விக்கெட் ஆகும்.

இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதான வரலாற்றில் ஒரு நாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் வீழ்ந்த நாளாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்