தோனி குறித்து ரசிகர்கள் கூறுவது உண்மைதான் - இந்திய நடுவர் பாராட்டு

கீப்பருக்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பல நேரங்களில் அவர்கள் பந்தை பார்ப்பது சவாலாக இருக்கும் என்று அனில் சவுத்ரி கூறியுள்ளார்.;

Update:2024-08-29 13:45 IST

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அதனால் எங்கு சென்றாலும் தோனிக்கு அனைத்து இந்நாள் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பாராட்டுவது வழக்கமாகும்.

சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் தோனி வல்லவர். ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமையை கொண்டவர். அதேபோல நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் தோனி வல்லவராக அறியப்படுகிறார். ஆட்டத்தின் சில தருணங்களில் கேட்ச், எல்பிடபுள்யூ போன்ற தீர்ப்புகளை நடுவர்கள் துல்லியமாக வழங்க மாட்டார்கள்.

ஆனால் தோனி அதை சரியாக கவனித்து நடுவரின் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ (டி.ஆர்.எஸ்.) எடுப்பார். அதை சோதித்துப் பார்க்கும்போது 90% நேரங்களில் தோனி நினைத்ததுபோல நடுவர்கள் வழங்கிய தீர்ப்பை மாற்றி வழங்குவார்கள். அதனால் 'டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம்' எனப்படும் டி.ஆர்.எஸ். விதிமுறையை 'தோனி ரிவ்யூ சிஸ்டம்'என்று ரசிகர்கள் பாராட்டுவது வழக்கமாகும்.

இந்நிலையில் ரசிகர்கள் கூறுவது போல தோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என்று இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டியுள்ளார். அத்துடன் கீப்பருக்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பல நேரங்களில் அவர்கள் பந்தை பார்ப்பது சவாலாக இருக்கும் என்றும் அனில் சவுத்ரி கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரசிகர்கள் கூறுவது உண்மைதான். தோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்க முடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் தோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்