இவரா பேட்டிங் பயிற்சியாளர்..? வாசிம் ஜாபரை கிண்டலடித்த மைக்கேல் வாகன்
தமது பந்துவீச்சில் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.
லண்டன்,
ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணி நிர்வாகங்கள் தேவையற்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது.
அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்காக கேப்டனை மட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவையும் அடியோடு மாற்றியுள்ளது. ஏனெனில் புதிய கேப்டனாக சீனியர் வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக டிராவிஸ் பெய்லிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோக துணை பயிற்சியாளராக ப்ராட் ஹார்டின், பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்ட் ஆகியோரை நியமித்துள்ள அந்த அணி பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபரை அறிவித்துள்ளது. இந்நிலையில் தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.
கடந்த பல வருடங்களாகவே சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை மையப்படுத்தி ஒருவரை ஒருவர் இவர்கள் கலாய்த்துக் கொள்வது வழக்கமாகும். குறிப்பாக வேண்டுமென்றே இந்தியாவை கலாய்க்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசுவதும் அதற்கு சினிமா படங்களை உபயோகித்து வாசிம் ஜாபர் பதிலடி கொடுப்பதும் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் வாசிம் ஜாபருடைய விக்கெட்டை மைக்கேல் வாகன் எடுத்துள்ளார். அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.
அவருடைய அந்த டுவிட் வைரலாகும் நிலையில் அதற்கு வழக்கம் போல வாஷிம் ஜாபர் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.