இந்திய ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐ.-க்கு அறிவுரை கூற வேண்டும் - பாக்.முன்னாள் வீரர் எச்சரிக்கை

இந்திய ஜாம்பவான்கள் பாகிஸ்தானுக்கு சென்று நாம் விளையாட வேண்டுமென பி.சி.சி.ஐ.க்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்று மொயின் கான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-12 15:46 GMT

லாகூர்,

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் போன்ற இந்திய ஜாம்பவான்கள் பாகிஸ்தானுக்கு சென்று நாம் விளையாட வேண்டுமென பி.சி.சி.ஐ.க்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மொயின் கான் தெரிவித்துள்ளார். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வரவில்லையெனில் இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக்கோப்பையில் விளையாட பாகிஸ்தானும் வராத விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"என்னுடைய பார்வையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் விளையாட்டை அரசியலில் இருந்து தனியாக வைக்க வேண்டுமென பி.சி.சி.ஐ.-க்கு ஆலோசனை கொடுக்க வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடுவதை பார்க்க விரும்புகின்றனர். அது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி மொத்த விளையாட்டுக்கும் நன்மையை ஏற்படுத்தும். எனவே ஐசிசி நடத்தும் இந்த தொடருக்கு பிசிசிஐ கவுரவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தானும் அதே முடிவை எடுக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்