இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நியூசிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அவர் களம் திரும்ப குறைந்தபட்சம் 6 மாதமாகும் என்று தெரிகிறது.

Update: 2023-03-08 22:23 GMT

மும்பை,


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் எஞ்சிய போட்டி தொடரில் இருந்து விலகினார். காயத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்காததால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை தவறவிட்டார்.

தற்போது நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் லேசான வலி மீண்டும் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று காயத்தில் இருந்து முழு உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் காயத்தில் இருந்து முழுமையாக தேற முடியவில்லை. இதனால் அவர் இந்திய அணிக்கு திரும்ப எடுத்த முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அவரது காயத்துக்கு நிரந்தர தீர்வு காண ஆபரேஷன் செய்ய வேண்டியது அவசியம் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை பும்ராவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. டாக்டர் ரோவன் மேற்பார்வையில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. டாக்டர் ரோவனிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜேம்ஸ் பேட்டின்சன், ஜாசன் பெரென்டோர்ப், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முதுகுப் பிரச்சினையை சரிசெய்ய ஏற்கனவே ஆபரேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் இறுதி வரை நியூசிலாந்தில் தங்கி சிகிச்சை பெறும் பும்ரா ஆகஸ்டு மாதம் முதல் பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி அவரது பயிற்சி முறைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும். அவர் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதியை எட்டும் வகையில் பயிற்சி முறைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பும்ரா முழு உடல் தகுதியை எட்ட குறைந்தபட்சம் 6 மாதம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் செய்துள்ளதால் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மற்றும் லண்டன் ஓவலில் ஜூன் 7-ந் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றாலும் பும்ராவால் விளையாட முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்