இறுதிப்போட்டியில் இந்திய அணி... ரசிகர்களிடம் சரண்டர் ஆன மைக்கேல் வாகன்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.;
கயானா,
டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு 50 உலகக் கோப்பையில் பைனலுக்கு வந்த இந்தியா தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அதேபோல் தோல்வியை தழுவாமல் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறது.
இதனிடையே உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக குற்றச்சாட்டி வந்தனர். குறிப்பாக அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியை விமர்சித்த மைக்கேல் வாகன், தற்போது ரசிகர்களிடம் சரண்டர் ஆகி உள்ளார். இந்திய அணியின் வெற்றிகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அதில் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல இந்திய அணியின் வெற்றிகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கூறுகையில், "இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல சரியான அணி. அவர்கள் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் ஆடுகளத்திலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் பேட்டிங்கிற்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ஆடுகளங்களிலும் தோல்வியை தழுவாமல் வந்திருக்கிறார்கள்" என்று அவர் பாராட்டி உள்ளார்.