உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Update: 2023-10-16 16:24 GMT

image courtesy: ICC twitter

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்க மற்றும் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் இருவரும் முறையே 61 ரன்கள் மற்றும் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த நிலையில் 43.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 11 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அடுத்ததாக வந்த மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் ஜோஷ் இங்கிலி இருவரும் அதிரடியாக விளையாடி முறையே 40 மற்றும் 58 ரன்கள் குவித்து அவுட்டாகினர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்