சொந்த ஊரில் களம் இறங்கும் உற்சாகத்தில் பும்ரா...!!

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நாளை (சனிக்கிழமை) பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

Update: 2023-10-13 02:52 GMT

image courtesy; AFP

ஆமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானை தோற்கடித்த பிறகு அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர்ச்சியான போட்டிகளால் சில மாதங்களாக சொந்த ஊரான ஆமதாபாத்துக்கு செல்லவில்லை. தற்போது உலகக்கோப்பை போட்டியின் அடுத்த ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிராக) அங்கு நடப்பதால், எனது தாயாரை நேரில் பார்க்கப்போகிறேன். சொந்த ஊரில் விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. நான் இங்கு ஒரு நாள் போட்டியில் விளையாடியதில்லை. ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் ஆடியிருக்கிறேன். இங்குள்ள சூழல் அருமையாக இருக்கப்போகிறது. ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வருவார்கள். நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்.

ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், பாபர் அசாம் போன்ற வீரர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியின் மிரட்டலை எதிர்கொள்வது குறித்து கேட்கிறீர்கள். ஒவ்வொரு அணியிலும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள், பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடமும் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பிட்ட அணிக்கு எதிராக என்று நாங்கள் விசேஷமாக தயாராவது என்று எதுவும் கிடையாது. மற்றவர்களை காட்டிலும் எங்களது திறமை மீதே முழு கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நாங்கள் எங்களது அணி மீதும், எங்களது பலத்தின் மீதும் கச்சிதமாக கவனம் செலுத்தினாலே போதும். சாதகமான முடிவு கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளோம்.

என்னை பொறுத்தவரை ஆடுகளம் எப்படி இருந்தாலும் நான் தயாராகும் விதத்திலும், அடிப்படை விஷயங்களிலும் சரியாக கவனம் செலுத்துவேன். ஆடுகளத்தை நன்கு கணித்து அதற்கு ஏற்ப எனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முயற்சிப்பேன். மற்றபடி விக்கெட் கிடைப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இவ்வாறு பும்ரா கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்