ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான கடைசி டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கவாஜா, சுமித்தின் அசத்தல் சதத்தோடு ஆஸ்திரேலிய அணி 475 ரன்கள் குவித்தது.
சிட்னி,
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் உள்ள எஸ். சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மழையால் பாதிப்புக்குள்ளான தொடக்க நாளில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா (54 ரன்) களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் 2-வது நாளான நேற்று கவாஜாவுடன் 3-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் சுமித் கைகோர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய கவாஜா தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டிலும் அவர் சதம் அடித்திருந்தார். அதுவும் இரண்டு இன்னிங்சிலும் (இங்கிலாந்துக்கு எதிராக 137 மற்றும் 101 ரன்) சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சிட்னியில் தொடர்ச்சியாக 3 சதங்கள் (ஹாட்ரிக்) ருசித்த 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட், ஆஸ்திரேலியாவின் டக் வால்டர்ஸ், இந்தியாவின் வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.
செஞ்சுரிக்கு பிறகும் கவாஜாவின் ரன்வேட்டை நீடித்தது. அவரை கட்டுப்படுத்த முடியாமல் தென்ஆப்பிரிக்க பவுலர்கள் திண்டாடினர். இன்னொரு பக்கம் ஸ்டீவன் சுமித் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களில் அதிக சதம் எடுத்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த ஜாம்பவான் டான் பிராட்மேனை (29 சதம்) பின்னுக்கு தள்ளி விட்டு மேத்யூ ஹைடனுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய வீரர்களில் ரிக்கி பாண்டிங் (41 சதம்), ஸ்டீவ் வாக் (32 சதம்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சுமித் இருக்கிறார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கையும் (8,643 ரன்) முந்தினார். சதம் அடித்த கையோடு சுமித் (104 ரன், 192 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜியிடமே பிடிபட்டு வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து கவாஜாவுடன், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். கடைசி பகுதியில் எந்த நேரத்திலும் டிக்ளேர் செய்யப்படும் சூழல் தென்பட்டதால் இருவரும் வேகமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். குறிப்பாக ஹெட் அதிரடியாக மட்டையை சுழற்றினார். இதனால் ஸ்கோர் மளமள வென உயர்ந்தது.
ஸ்கோர் 468-ஐ எட்டிய போது டிராவிஸ் ஹெட் 70 ரன்களில் (59 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கவாஜா தனது முதலாவது இரட்டை சதத்தை நெருங்கிய சமயத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே ஆட்டத்தை முடிக்க வேண்டியதாகி விட்டது.
நேற்றைய முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 131 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்துள்ளது. கவாஜா 195 ரன்களுடனும் (368 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்), மேட் ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
மழை பாதிப்பை கருத்தில் கொண்டு இன்றைய 3-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடைபெறும். 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி சிறிது நேரத்தில் விளையாடி விட்டு டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.