ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கிரிக்கெட் அரைஇறுதியில் இந்திய அணி, வங்காளதேசத்தை நேற்று எதிர்கொண்டது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேசம் 17.5 ஓவர்களில் 51 ரன்னில் சுருண்டது. கேப்டன் நிகார் சுல்தானா (12 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் ஆடிய இந்தியா 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஷபாலி வர்மா 17 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் எடுத்தனர். இறுதி சுற்றை எட்டியதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
மற்றொரு அரைஇறுதியில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது. இன்று (திங்கட்கிழமை) பகல் 11.30 மணிக்கு நடக்கும் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது.