3-வது டி-20: இலங்கை அசத்தல் பந்துவீச்சு.. இந்தியா 137 ரன்கள் சேர்ப்பு

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2024-07-30 16:18 GMT

Image Courtesy : AFP

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து 7.40 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன்(0), ரிங்கு சிங்(1), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) ஆகியோரது விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் இந்திய அணி தடுமாறியது. தொடர்ந்து சிவம் துபே 13 ரன்களிலும், ரியான் பராக் 26 ரன்களிலும் கேட்ச் ஆகி வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், விக்கிரமசிங்கே, அசிதா பெர்னாண்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்