2-வது டெஸ்ட் போட்டி: தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையே 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார்.

Update: 2022-12-28 23:27 GMT

மெல்போர்ன்,



ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (48 ரன்), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (9 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். டிராவிஸ் ஹெட் (51 ரன்), அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து முந்தைய நாள் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 200 ரன்களுடன் வெளியேறிய சாதனை நாயகன் டேவிட் வார்னர் நுழைந்தார். மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத அவர் முதல் பந்திலேயே போல்டு ஆனார். அவருக்கு பிறகு வந்த கேப்டன் கம்மின்சும் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 14 ரன் இடைவெளியில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆஸ்திரேலியா லேசான தடுமாற்றத்தை சந்தித்தது. நாதன் லயன் தனது பங்குக்கு 25 ரன்கள் (17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

விக்கெட் கீப்பர் சதம்

இதைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியுடன், 2-வது நாளில் விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் பெவிலியன் திரும்பிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் கைகோர்த்தார். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் ஆக்ரோஷமான பவுன்சர் தாக்குதலை சாதுர்யமாக கையாண்டு ரன்களை திரட்டினர். அபாரமாக ஆடிய அலெக்ஸ் கேரி தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த முதல் சதம் இது தான்.

அணியின் ஸ்கோர் 500-ஐ தாண்டி வலுவடைய உதவிய அலெக்ஸ் கேரி 111 ரன்களில் (149 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு மிட்செல் ஸ்டார்க் சிறிது நேரம் விளையாடினார். மார்கோ ஜேன்சன் வீசிய ஒரு பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. அத்துடன் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 145 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேமரூன் கிரீன் 51 ரன்களுடனும் (177 பந்து, 5 பவுண்டரி), ஸ்டார்க் 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நோர்டியா 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு சிக்கல்

பின்னர் 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய டி புருன் 3 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற வார்னர் கோட்டை விட்டார். தென்ஆப்பிரிக்க அணி7 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டி புருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 371 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் தவிப்பதால், இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

கடைசி டெஸ்டில் கேமரூன் கிரீன் விலகல்

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் 2-வது நாளில் பேட்டிங் செய்த போது, வேகப்பந்து வீச்சாளர் நோர்டியா வீசிய பந்து அவரது வலதுகையை பதம் பார்த்தது. பந்து தாக்கியதில் ஆள்காட்டி விரலில் ரத்தம் வடிந்தது. இதனால் பாதியிலேயே வெளியேறிய அவருக்கு ஆள்காட்டி விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. என்றாலும் வலிநிவாரணி மருந்து போட்டுக் கொண்டு 3-வது நாளான நேற்று தைரியமாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் அரைசதம் அடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். ஆனால் 2-வது இன்னிங்சில் அவர் பந்துவீசமாட்டார் என்றும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்கும் கடைசி டெஸ்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

23 வயதான கேமரூன் கிரீன் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி இருக்கிறேன். இப்போது சிட்னி டெஸ்டை தவற விடுவது வேதனை அளிக்கிறது. அடுத்து வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் உடல்தகுதியை எட்டுவதற்கு சாத்தியமான எல்லாவற்றையும் செய்வேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்