2-வது டெஸ்ட்: வங்காளதேச அணி 227 ரன்னில் ஆல்-அவுட்- முதல்நாள் முடிவில் இந்திய அணி 19-0

இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில் வங்காளதேச அணி 227 ரன்னில் அடங்கியது. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டினர்.

Update: 2022-12-22 23:32 GMT

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தின் ஹீரோ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். 2010-ம் ஆண்டு டிசம்பரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்டிஸ் விளையாடிய அவர் அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து இப்போது தான் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். வங்காளதேச அணியில் இரு மாற்றமாக யாசிர் அலி, எபாதத் ஹூசைன் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' ஜெயித்த வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாகிர் ஹசனும், நஜ்முல் ஹூசைன் ஷன்டோவும் களம் புகுந்தனர். ரன் கணக்கை தொடங்கும் முன்பே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ஜாகிர் ஹசன் (15 ரன்) உனட்கட் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் ஸ்லிப்பில் பிடிபட்டார். ஹூசைன் ஷன்டோ 24 ரன்னில் வெளியேறினார்.

227 ரன்னில் ஆல்-அவுட்

இதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 'ஸ்விங்' தாக்குதலிலும், அஸ்வின் சுழல் ஜாலத்திலும் வங்காளதேசத்துக்கு இடைவிடாது நெருக்கடி கொடுத்து நிலைகுலைய வைத்தனர். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக் மட்டும் நிலைத்து நின்று போராடினார். அணி 200 ரன்களை கடக்க உதவிய மொமினுல் 84 ரன்களில் (157 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் சிக்கினார். அதாவது முட்டிப்போட்டு அடிக்க தயாரான அவர் பந்து வெளியே செல்வதாக நினைத்து பேட்டை உயர்த்திய போது, அது கையுறையில் உரசி கேட்ச்சாக மாறியது. முன்னதாக கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 16 ரன்னில் வீழ்ந்தார்.

முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 14 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகளும், உனட்கட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 14 ரன்னுடனும், கேப்டன் லோகேஷ் ராகுல் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்