20 அணிகள்... புதிய வடிவம் பெறும் 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகள்... முழு விவரம்...!

2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-22 09:40 GMT

Image Courtesy: T20 World Cup

துபாய்,

8வது 20 ஓவர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது.இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அந்த உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன.

மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதில் ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.

நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிகா, நெதர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் ஐசிசி தரவரிசை அடிப்படையில் இரண்டு (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் தொடரை நடத்துவதால் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பை புதிய முறையில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி மொத்தமுள்ள 20 அணிகளும் ஒரு குரூப்பிற்கு 5 அணிகள் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட உள்ளன. அந்த குரூப்பில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

இதையடுத்து ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளூம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ( ஒவ்வொரு குரூப்பிலும் தலா 4 அணிகள்) அந்த சூப்பர் 8 சுற்றில் மோத வேண்டும்.

சூப்பர் 8 சுற்றின் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Tags:    

மேலும் செய்திகள்