கரடியின் ராஜ்யத்தில் உய்யலாலா
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி எல்லாம் அங்குள்ள பங்குச் சந்தையில் எதிரொலிக்கும்.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி எல்லாம் அங்குள்ள பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். பங்குச்சந்தை ஏற்றம் என்றால் அதை காளையின் ராஜ்யம் என்றும், பங்குச்சந்தையில் வீழ்ச்சி என்றால் கரடியின் ராஜ்யம் என்றும் முதலீட்டாளர்கள் கூறுவது உண்டு. காளையின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் முதலீட்டாளர்களுக்கு லாபம் இருக்கும். கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் முதலீட்டாளர்கள் தலையில் கையை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துகொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கடந்த சில நாட்களாக அடிக்குமேல் அடிவாங்கிக் கொண்டு இருக்கிறது. எங்கே 2008–ம் ஆண்டு வீழ்ச்சியைப் போல கடுமையான வீழ்ச்சி அடைந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உலகம் உறைந்துபோய் நிற்கிறது. காளையின் பாதுகாப்பில் இருந்த பங்குச்சந்தை, இப்போது கரடியின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது. நேற்று முன்தினம் மட்டும் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 புள்ளிகளில் நிலைகொண்டது. இதேபோல நிப்டி 868.25 புள்ளிகள் சரிந்து 9,500 புள்ளிகளில் இருந்தது. இதன் காரணமாக முதலீட்டா ளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3,500 கோடி அளவுக்கான பங்குகளை விற்றுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் ரூ.23 ஆயிரம் கோடி அளவுக்கான பங்குகளை விற்றுவிட்டு பணத்தை எடுத்துள்ளனர். 2 நாட்கள் அமெரிக்க பங்குச் சந்தை தன் இயக்கத்தை சற்று நேரம் நிறுத்தி வைத்திருந்தது.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசை உலகம் தழுவிய ஒரு கொள்ளை நோய் என்று அறிவித்ததும், தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் தங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ரத்து செய்ததும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அடுத்த 30 நாட்களுக்கு யாரும் பயணம் செய்யக்கூடாது என்று தடை அறிவித்ததும் நேற்று முன்தினம் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்பட்டது. நேற்று முன்தினம்தான் அப்படியென்றால், நேற்று காலையில் பங்குச்சந்தை தொடங்கிய உடனேயே
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவைக் கண்டது. சென்செக்ஸ் 3,090 புள்ளிகளும், நிப்டி 966 புள்ளிகளும் சரிந்து 45 நிமிடம் வர்த்தகத்தை நிறுத்தி வைக்கவேண்டிய வருத்தமான நிலை ஏற்பட்டது. கரடியின் பிடியில் அது சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கிறது. 45 நிமிடங்களுக்குப்பிறகு மீண்டும் திறந்தவுடன் நம்பிக்கைத் தரும் வகையில் வர்த்தகம் தொடங்கி முடிந்தது. பொதுவாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளால்தான் பங்குச்சந்தை வர்த்தகம் தழைக்கும். ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, சுற்றுலா பாதிப்பு, வர்த்தகம் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. இது நமக்கு லாபத்தை தராது என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எடுத்துவிடுகிறார்கள்.
பொதுவாக, கொரோனா வைரஸ் போன்ற ஏதாவது நோயின் தாக்கம் இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தியோ, வர்த்தகமோ பெரும் பாதிப்பை அடையாது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசாங்கம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திவிட்டது. இதனால் உற்பத்தி, வர்த்தகம் படுத்துவிட்டது. மொத்தத்தில், இந்த கொரோனா வைரஸ் படுத்தும் பாடு உலகம் முழுவதும் சொல்லிமாளாது. எப்படி சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதோ, அதுபோல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, அதன் தாக்கத்தில் இருந்து மீளும்வரை பங்குச்சந்தை கரடியின் பிடியில்தான் இருக்கும். ஆதிக்கம் மீண்டும் காளையின் ஆதரவில், அணைப்பில் இருந்தால்தான் உலகப்பொருளாதாரம் உயரும், இந்தியாவும் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்.