கார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

கனமழை காரணமாக மலையில் மீண்டும் மண் சரிவு அபாயம் இருந்ததால் மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.;

Update:2024-12-13 18:05 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முதலில் ஒரு மடக்கில் ஏற்றப்படும் ஒற்றை தீபத்தால் ஒன்றே பரம்பொருள் என்பதையும், அதிலிருந்து பிற தீபங்களை ஏற்றுவதன் மூலம் ஏகன் அனேகன் என்பதையும் உணர்த்தும் வகையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் கண்டனர்.

இன்று மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் தொடங்கின. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை ஏற்கனவே பூஜை செய்யப்பட்டு, பக்தர்களால் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், 1500 மீட்டர் நீள காடா துணியும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. காடா துணியில் நெய் ஊற்றி அதை திரியாக்கி தீப கொப்பரையில் வைக்கப்பட்டு மகா தீபம் தயாரானது.

இது ஒருபுறமிருக்க, கோவிலின் தங்க கொடிமரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் (உற்சவர்கள்) ஆகியோர் எழுந்தருளினர். மாலை ௬ மணிக்கு அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

அதன்பின்னர் தங்க கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றப்பட்டதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ள நவ கோபுரங்கள் உட்பட திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் அகல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். மோட்ச தீபம் எனப்படும் மகாதீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம்.

மகா தீபத்தை காண்பதற்காக கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க மலையேறி செல்வதற்கு 2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கனமழை காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாலும், அதிக அளவிலான பக்தர்கள் மலை ஏறி செல்லும்போது மண் சரிவு அபாயம் இருந்ததாலும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்