திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க தரிசனம்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தூர இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியதாக உள்ளன. இந்த லிங்கங்களை வழிபட்டால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.
1.இந்திரலிங்கம், திசை: கிழக்கு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ராஜ கோபுரத்தில் இருந்து கிழக்கு நோக்கி புறப்படும்போது கிரிவலப்பாதையில் முதல் லிங்கம் இந்திரலிங்கம். திசைகள் எட்டு. அதில் கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
2.அக்னிலிங்கம், திசை: தென்கிழக்கு
கிரிவலப்பாதையில் 2-வது லிங்கம் இது. செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள லிங்கங்களில் இந்த அக்னிலிங்கம் மட்டுமே கிரிவலப்பாதையில் வலது பக்கம் அமைந்து உள்ளது. மற்ற அனைத்து லிங்கங்களும் இடது பக்கம் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இறைவன் ஜோதி வடிவாக (அக்னி) காட்சி அளித்தார். ஆகவே இந்த அக்னிலிங்கம் மலை பக்கமாக அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன், இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள் தொல்லை, மனபயம் நீங்கும்.
3.எமலிங்கம், திசை: தெற்கு
கிரிவலப்பாதையில் 3-வது லிங்கம் ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
4.நிருதி லிங்கம், திசை: தென்மேற்கு
கிரிவலப்பாதையில் 4-வது லிங்கமான நிருதி லிங்கத்தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். மலையில் நந்தி படுத்திருந்து தலையை உயர்த்தி பார்ப்பது போல தெரியும். சற்று திரும்பி மலை உச்சியை பார்த்தால் மலை இரு பிரிவாக தெரியும். இது சிவபெருமானும், சக்தியும் சேர்ந்து இருப்பதை உணர்த்தும். கோவிலின் அருகே சனி தீர்த்தம் உள்ளது.
இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் கிடைக்கும். சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.
5.வருணலிங்கம், திசை: மேற்கு
கிரிவலப்பாதையில் மேற்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி, இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
6.வாயுலிங்கம், திசை: வடமேற்கு
இப்புவி மண்டலத்தை நமது முதாதையர் 5 பெரும் பிரிவுகளாக பிரித்தனர். அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதாகும். எந்த உயிரும் காற்று இல்லாமல் வாழ இயலாது. இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். கண் திருஷ்டி விலகும். பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
7.குபேர லிங்கம், திசை: வடக்கு
7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கம் மீது அனைவரும் காசுகளை காணிக்கையாக போடுவதை காணலாம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
8.ஈசான்ய லிங்கம், திசை: வடகிழக்கு
கிரிவலப்பாதையில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக்கொண்டால் மனம் ஒரு நிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழி காட்டும் என்பது நம்பிக்கை.