வெற்றியை அள்ளித்தரும் நிசும்பசூதனி

சோழ பரம்பரையை காப்பாற்றிய நிசும்பசூதனி, இன்று வடபத்ரகாளியாய் தஞ்சையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;

Update: 2023-03-21 14:09 GMT

வாழ்வில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் அனைவரும் இறைவனிடம் வேண்டுவது நாம் செய்யும் செயல்களில் வெற்றி பெற அருள்புரிய வேண்டும் என்பதே. அப்படி சோழர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ர காளியாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டு இருப்பவள், உக்கிர காளி நிசும்பசூதனி.

முத்தரையர்களிடம் இருந்து கைப்பற்றிய இடத்தில், கி.பி. 850-ம் ஆண்டு, விஜயாலய சோழன் ஊரின் எட்டு மூலைகளிலும் எட்டு காளி கோவிலை அமைத்தான். அப்போது வடக்கு நோக்கி நின்று சும்பன்- நிசும்பனை கொன்ற நிசும்பசூதனியை அங்கு வீற்றிருந்து, தனக்கும், தன் சந்ததிகளுக்கும் போரில் வெற்றியைத் தர வேண்டி மனமுருகி வேண்டினான். அம்மன், மன்னன் முன்பாக தோன்றி தான் போரில் வென்ற கோலத்திலேயே கோவில் கொண்டாள். ராஜராஜ சோழனும், அவன் பாட்டனும், பாட்டனுக்கு பாட்டனும் நிசும்பசூதனியை வழிபட்டு தொடர் வெற்றியை பெற்றனர். ராஜராஜ சோழனுக்குப் பிறகு ராஜேந்திரன், ராஜாதிராஜன் மற்றும் அவன் சந்ததியினருக்கும் வெற்றியை அள்ளி வழங்கியவள் இந்த நிசும்பசூதனி.

தஞ்சாவூர் என்றதும் ராஜராஜ சோழனும், பெரிய கோவிலும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் அப்படி நினைவில் நிற்கும் அளவுக்கு வாழ, ராஜராஜ சோழனுக்கு வெற்றியைக் கொடுத்தவள் இந்த நிசும்பசூதனி. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இன்று 'வடபத்ரகாளி', 'ராகுகால காளி' என்று அழைக்கப்படும் அம்மனே நிசும்பசூதனி. 7 அடி உயரத்தில் 8 கரங்களோடு ஒரு கால் மடித்து, மறு கால் தரையில் கிடக்கும் அசுரன் தலை மீது பதித்தது போன்ற தோற்றம். திருமுடிக்கற்றை விரிந்து பறக்கும் நெருப்பு ஜூவாலை போன்றும், அதனை கட்டுப் படுத்த வைத்தது போன்ற அக்கினி கிரீடம், தீர்க்கமான பார்வை கொண்ட கண்கள், தெற்றுப் பல், வல்லமையுடன் விளங்கிய அசுர கூட்டத்தை அழிக்க எம்பெருமானிடம் வேண்டி விரதம் இருந்ததால் மெலிந்த திருமேனி. வனப்பின்றி வார் கொண்ட மார்பகங்கள், விலா எலும்பு புடைக்க தெரியும் உருவம். மண்டை ஓடுகளால் ஆன மாலை, மார்புக்கு கீழே கச்சையாய் சுற்றி இருக்கும் பாம்பு. ஏழு கரங்களில் வாள், தனுசு, பாசம், மணி, திரிசூலம், கேடயம், கபாலம் ஏந்தி, வலது மேல்கரத்தில் திரிசூலம் கீழ் நோக்கி அசுரன் மேல் பாயும் தோற்றம். வலது காதில் பிரேத குண்டலம், இடது காதில் பெரிய குழை என வழக்கத்திற்கு மாறாக அரிய திருமேனியாய் காட்சியளிக்கிறாள், இந்த நிசும்பசூதனி.

சோழர்கள் ஆட்சியில் ஓயாது போர்கள் நடந்தன. கடல் கடந்து சென்றும் வெற்றிபெற்ற பெருமை சோழர்களுக்கு உண்டு. அவர்கள் ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் முன்னும், வெற்றி பெற்று வந்த பிறகும், இந்த அம்மனை மனம் உருகி வேண்டத் தவறியது இல்லை. அதனாலேயே பெரும்பாலான போர்களில் வெற்றி பெற்றதோடு, அதிக வீரர்கள் மரணமடையாமல் திரும்ப வந்தது, நிசும்பசூதனியின் அருளே என்ற எண்ணம் திண்ணமாக சோழர்களுக்கு உண்டு. ராஜராஜ சோழன் இறுதியாக செய்த போரில் சாளுக்கியர்களை வென்று அவர்களின் செல்வங்களைக் கொண்டு வந்து பெரிய கோவில் பணிக்கு கொடுத்தான். அப்பொழுது ராஜராஜ சோழனின் அணுக்கி பஞ்சமாதேவி, போரில் இருந்து திரும்பி கோட்டைக்குச் செல்லாமல் நேராக நிசும்பசூதனி கோவிலுக்கு வந்தாள். தலையில் நீரூற்றி துர்க்கை சிலை முன் இருந்து மனமுருகி வேண்டினாள். கோவிலுக்கு அருகில் உள்ள குறிமேடையில் மூன்று நாட்கள் உபவாசம் இருந்து போரில் இறந்தவர்கள் வீடுபேறு அடைய நேர்த்திக்கடன் செய்ததாகவும், சாளுக்கியத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களை காக்கவும் 45 நாட்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டதாகவும் வரலாற்று பதிவுகள் கூறுகிறது.

சோழ பரம்பரையை காப்பாற்றிய நிசும்பசூதனி, இன்று வடபத்ரகாளியாய் தஞ்சையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தந்து, நம்பியவர்களுக்கு துணை இருந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்கிறாள். தஞ்சை வடக்கு வாசலில் சிறிய கருவறை மற்றும் ஒரே ஒரு தாழ்வாரத்துடன் கூடிய சிறிய ஆலயத்தில் பெரிய அரிய சக்திகளோடு வீற்றிருந்து வருபவர்களுக்கு வெற்றியை அள்ளித் தருகிறாள் நிசும்பசூதனி. அடுத்த முறை தஞ்சைக்கு சென்றால் தவறாமல் சென்று தரிசித்து அன்னையின் அருளை பெறுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்