வடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .;
சென்னை,
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூச திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.
இத்தகைய மகத்துவம் மிக்க தைப்பூசத்தையொட்டி முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .
தைப்பூச திருவிழாவையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வட பழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து , மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.
கூட்ட நெரிசல் இன்றி முருகப்பெருமானை தரிசனம் செய்ய மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவடி எடுத்து வருவோர், அலகு குத்திநேர்த்திக்கடன் செலுத்த வருவோர், முதியோர், கர்ப்பிணியர், கைக்குழந்தையுடன் வருவோர், மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். பால்குடம் எடுத்து வருவோர், பொது தரிசனத்திற்கு வருவோர் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர்.