சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
நாளை காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.;
தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) நடந்தது. அதன்பின், 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா பரவல், திருப்பணி வேலைகள் தாமதம் ஆகியவற்றால் கும்பாபிஷேக விழா தள்ளிப்போனது.
இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் வண்ணம் தீட்டப்பட்டன. பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஆகஸ்டு 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக 66 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 16-ந் தேதி மாலையில் வேத பாராயணம், திருமுறை பாராயணத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
17-ந்தேதி பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. 19-ந் தேதி அனைத்து பரிவாரமூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு, மாலையில் ஐந்தாம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி விமானம், ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.