ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடைபெற்ற ஆடித்தேரோட்டம்
பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவின் 8-வது நாளான நேற்று அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் மேலத்தெரு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மண்டகப்படியில் இரவு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று காலை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பர்வதவர்த்தினி அம்பாள் தேர் அசைந்தாடி வந்த அற்புத காட்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
நாளை மறுநாள் (ஆகஸ்டு 8) மாலையில் தபசு மண்டகப்படியில் சாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் தேதி இரவு 7 மணிக்கு சாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.