திருப்பதி அன்னபிரசாதம்... ஆர்கானிக் அரிசிக்கு பதில் சாதாரண அரிசியா..? தேவஸ்தானம் விளக்கம்

அன்னப்பிரசாதம் தயாரிப்பது குறித்தோ, தயாரிப்பை அதிகரிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது.

Update: 2024-07-03 12:37 GMT

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. பக்தர்களுக்கு அனைத்து இடங்களிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக திருமலையில் ஆங்காங்கே அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதம் தயாரிப்பதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை (ஆர்கானிக் அரிசி) மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, பழைய முறையில் சாதாரண அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தேவஸ்தானத்தின் கவனத்திற்குச் செல்ல, உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ.ஷ்யாமள ராவ், கோவில் புரோகிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் அன்ன பிரசாத விநியோகம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அன்னப்பிரசாதம் தயாரிப்பது குறித்தோ, தயாரிப்பை அதிகரிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனால் ஸ்ரீவாரி கோவிலில் அன்ன பிரசாதம் தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்