பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-07-10 14:56 GMT

பழனி:

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர்.

அதன்படி இன்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவில், அடிவாரம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனிக்கு வந்த பக்தர்கள் பலர் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். பழனி முருகன் கோவில் மட்டுமின்றி அதன் உபகோவில்களான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி, பாதவிநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.

வழக்கமாக வார விடுமுறை நாட்களில் வாகனங்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்த வாகனங்களை நிறுத்த கிழக்குகிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. ஆனால் பக்தர்கள் பலர் சாலையோரம், கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதனால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, இடும்பன்கோவில் ரோடு ஆகிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்