நடராஜர்- சுந்தரவிடங்க தியாகராஜருக்கு அபிஷேகம்

நடராஜர்- சுந்தரவிடங்க தியாகராஜருக்கு அபிஷேகம்

Update: 2023-01-06 18:45 GMT

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் மற்றும் சுந்தர விடங்க தியாகராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம்

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நேற்று மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் உள்ளிட்ட நட்சத்திரங்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி போன்ற மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் உள்பட வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாப்பொடி, கரும்புச்சாறு, பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பாததரிசனம்

அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சுந்தரவிடங்க தியாகராஜர் நீலோதம்பாளுக்கு 108 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து சாமிக்கு விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்கள் மற்றும் பட்டு சாற்றி அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பாததரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திட்டச்சேரி

திட்டச்சேரி ப.கொந்தகையில் பஞ்சவனநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று காலை ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவுபொடி, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு தீர்த்தவாரியும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

சிக்கல் சிங்காரவேலர்

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அமைந்துள்ள நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்