மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்

பொதிகை மலையில் பிறந்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி, கடலில் கலக்கும் இடம் பழங்காலத்தில் ‘கொற்கை’ என்று அழைக்கப்பட்டது.

Update: 2018-10-16 11:04 GMT
கொற்கை வழியாக ஓடித்தான் வங்கக் கடலில் சங்கமித்திருக்கிறது தாமிரபரணி. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் ஏரலுக்கு முன்பாக ஒரு சிறிய சாலை வடக்கு நோக்கித் திரும்புகிறது. அந்தச் சாலையில் வரும் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் கிழக்கிலும், உமரிக்காடு எனும் கிராமத்திற்கு 4 கிலோமீட்டர் வடக்கிலும், முக்காணி எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் கொற்கை அமைந்துள்ளது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கிய கொற்கையில், தற்போது தாமிரபரணி கடலில் கலக்கவில்லை. ஆம்! கால ஓட்டத்தில் தூர்ந்து கடல் உள்வாங்கியதால் கொற்கையில் தற்போது கடல் இல்லை. மாறாக ஆத்தூர், முக்காணி, சேர்ந்த பூமங்கலம் வழியாக வந்து அருகிலுள்ள பழையகாயல், புன்னக்காயல் பகுதிகள் வழியாக ஓடி வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது தாமிரபரணி.

உரோமச முனிவருக்கு முக்தி அடைய வேண்டும் என்று ஆர்வம். அகத்திய முனிவரின் வழிகாட்டலின்படி தாமிரபரணி நதியில் ஒன்பது பூக்களை மிதக்கவிட்டார். அந்தப் பூக்கள் கரை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்பது அகத்தியர் இட்ட கட்டளை. அதன்படி உரோமச முனிவர் தாமிரபரணி நதியில் மிதக்க விட்ட பூக்கள் முறையே, பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், சங்காணி எனும் குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி ஆகிய தலங்களில் ஒதுங்கியது. அந்த எட்டு தலங்களிலும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர், கடைசிப் பூ கரை சேர்ந்த, ‘சேர்ந்த பூமங்கலம்’ என்ற இடத்திலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகத்தில் நீராடி வழிபட்டார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், முனிவரின் முன்பாக தோன்றினார். மேலும் முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். உரோமச முனிவர் நிறுவி வழிபட்ட சிவலிங்கம், சேர்ந்தபூ மங்கலத்தில் கயிலாசநாதர் எனும் திருநாமத்தில் கிழக்கு நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார். அவரது உடனுறை சக்தியாக தெற்கு நோக்கிய வண்ணம் அழகிய பொன்னம்மை எனும் சவுந்தர்ய நாயகி அருள்கிறாள். சிவகாமி அம்பாள் தான், இங்கு அழகிய பொன்னம்மையாக அருள்வதாக சொல்லப்படுகிறது.

பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி, பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்த பூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சங்குமுகம் பகுதியில் தான் மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து ஒன்றாகும் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எனவே, சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி இத்தல கயிலாசநாதருக்கு அபிேஷகம் செய்து வழிபட்டால் சுக்ர தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

ஏனெனில் இங்கு அகத்தியரின் எண்ணப்படி, சிவபெருமான் சுக்ரனின் அம்சமாக இருந்து அருள்கிறார். அதுமட்டுமல்ல இத்தலத்தின் அருகில்தான் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகம் இருக்கிறது. இத்தல தீர்த்தக்கரையினில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வெகு சிறப்பு என்கிறார்கள்.

இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். ஆலயப் பிரகாரத்தில் கன்னி விநாயகர், அறுபத்து மூவர், நால்வர் சன்னிதி, வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், மீனாட்சியம்மன், சொக்கநாதர், நவலிங்கங்கள், பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி போன்றவை உள்ளன. இத்தல நவலிங்க வழிபாடு மனநோய்களை அகற்றும் என்கிறார்கள். பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, சிவராத்திரி, அமாவாசை நாட்களில் இத்தலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானது.

இத்தல தாமிரபரணி தீர்த்தக்கரையினில் புஷ்கர நாட்கள், மாதப்பிறப்பு, அமாவாசை நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது நன்மை தரும். இதுநாள் வரை சரியாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, ஆலயத்தை பதினோரு முறை வலம் வரவேண்டும். பின்னர் இங்குள்ள நவலிங்க சன்னிதியில் நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நற்பலன்களை தரும் என்கிறார்கள்.

உரோமச முனிவருக்கு முக்தி கிடைத்த தலம் என்பதால், முன்னோர்களுக்காக இத்தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து, நவலிங்கங்களை வலம் வந்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

அமைவிடம்

தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருநெல்வேலியில் இருந்து 51 கிலோமீட்டர் தூரத்திலும் மற்றும் ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்