உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை - புதின்

உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-14 22:18 GMT

Image Courtesy: AFP

அஸ்டனா,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 234-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாகி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்.

கஜகஸ்தான் பயணத்தின் போது ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

உக்ரைன் மீதான போருக்காக நான் வருத்தப்படவில்லை. ரஷியா சரியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு எங்களிடம் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்