உக்ரைனின் குடியிருப்புகள் மீது ரஷியா கொடூர தாக்குதல்: 2 பேர் பலி, 5 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷியா ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-28 09:12 GMT

கீவ்,

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா படையெடுப்பு தொடங்கி ஓராண்டையும் கடந்து நீடித்து வருகிறது. இதில் இரு நாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகி உள்ளனர்.

உக்ரைனின் குடியிருப்புகள் பல சேதமடைந்து உள்ளன. எனினும், இரு நாடுகளும் போரை நிறுத்த முன்வராமல் உள்ளன. இந்த நிலையில், உக்ரைனின் ஹோஹோலீவ் கிராமத்தில் எண்ணெய் ஆலை ஒன்றின் மீது ரஷியா திடீரென இன்று ராக்கெட்டுகளை கொண்டு ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவரான ஆண்ட்ரி எர்மாக் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் பணிகள் மற்றும் இடிபாடுகளை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும், ரஷிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஷிய பகுதி மீது விமானம் வகையை சேர்ந்த ஆளில்லா விமானம் கொண்டு நடத்த முயற்சித்த தாக்குதலை எங்களுடைய வான் பாதுகாப்பு படைகள் முறியடித்து உள்ளனர். அதனை மாஸ்கோ பகுதியில் சுட்டு வீழ்த்தினர் என தெரிவித்தனர்.

உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதுடன், வானிலேயே அது அழிக்கப்பட்டது. இதனால், யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை. சேதமும் ஏற்படவில்லை.

எனினும், நேற்றிரவு குடியிருப்பு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 2 பேர் காயமடைந்தனர் என உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில், பீரங்கிகள், சிறிய ரக பீரங்கிகள், குண்டுகள், ஆளில்லா விமானம் மற்றும் விமானம் உள்ளிட்டவற்றை கொண்டு 395 குண்டுகளை வீசியுள்ளனர் என உக்ரைனின் தென்பகுதிக்கான ராணுவ நிர்வாகத்தின் தலைவர் அலெக்சாண்டர் புரொகுடின் கூறியுள்ளார்.

குறைந்த உயரத்தில் பறக்க கூடிய 4 ஏவுகணைகளை ரஷியா வீசின. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர் என அந்நாட்டு ராணுவம் இன்று வெளியிட்ட டெலிகிராம் தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்