லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா ராக்கெட் தாக்குதல்

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Update: 2024-09-20 13:27 GMT

Image Courtesy : AFP

ஜெருசலேம்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஜ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்ட் எக்ஸ் ஊடகத்தில் கூறும்போது, "போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்துவோம்" என்றார்.

இதற்கிடையில் லெபனானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 2800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்த நிலையில், நாடு முழுவதும் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த நாளே லெபனானில் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இதற்கு தக்க பதலடி கொடுப்போம் எனவும் ஹிஜ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இன்று ஹிஜ்புல்லா அமைப்பினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 140 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலின் விமான படைத்தளங்களை குறிவைத்து தாக்கியதாகவும் ஹிஜ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்