கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தியது, வடகொரியா - பரபரப்பு தகவல்கள்

கொரோனாவை வடகொரியா வெற்றிகரமாக வீழ்த்தி இருப்பதாகவும் இதுகுறித்து அந்த நாட்டு அரசு அறிவிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-06-22 02:06 GMT

கோப்புப்படம்

சியோல்,

வடகொரியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மாதம் 8-ந் தேதி உறுதியானது. அங்கு கொரோனா தொற்று தினமும் எத்தனை பேருக்கு பரவியது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தொற்று அறிகுறி பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றிய தரவுகள்தான் வெளிவந்தன. தடுப்பூசியோ, சிகிச்சைகளோ நுழைந்திடாத அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல், உலகளாவிய கவலையை ஏற்படுத்தியது.

ஆனாலும் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தி தீவிரமாக கண்காணித்ததுடன், பாரம்பரிய சிகிச்சை முறைகளை மக்கள் பின்பற்றி வந்தனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நாடு கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அரசு தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

2 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கிற இந்த நாட்டில், 18 சதவீதம்பேர் கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்த நேரத்தில், பலி எண்ணிக்கை 100-க்குள் அடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

வடகொரியா, கொரோனா தொற்றை தோற்கடித்துவிட்டதாக விரைவில் அறிவிக்கும் என்று தென்கொரிய அரசும், சில நிபுணர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உண்மை நிலவரம் என்ன?

இதுபற்றி சியோல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர் மூன் சியோங் மூக் கூறுகையில், "அத்தகைய அறிவிப்புக்கு 2 பக்கங்கள் உள்ளன. கொரோனா போய் விட்டது என்று வடகொரியா அறிவித்தால், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தொற்றுநோயைக் கடந்து வந்த ஒரு சிறந்த தலைவர் என்பதை அது வலியுறுத்தலாம். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த கட்டுப்பாடுகளை அந்த நாடு பராமரிக்க முடியாது" என தெரிவித்தார்.

அதே நேரத்தில் வட கொரியாவில் கொரோனாவின் உண்மையான நிலவரம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த நாடு உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைத்து விட்டதாக கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

உண்மை நிலவரம் எவ்வாறாக இருந்தாலும், வடகொரியாவை வெளியில் இருந்து கண்காணித்து வருகிற குழுக்கள், அங்கு பேரழிவு எதையும் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்