அமெரிக்காவில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்காவில் சாலையில் சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 2 சிறுவர்கள் உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

Update: 2023-07-04 16:39 GMT

Image Courtesy: AFP

ரத்த வெள்ளத்தில்...

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பெரிய நகரங்களுள் ஒன்று பிலடெல்பியா. இங்குள்ள கிங்செஸிங் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது சாலையில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டு துளைக்காத கவச உடை

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, ஏ.ஆர்.வகை துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அச்சத்தில் பொதுமக்கள்

மேரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரின் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற 2-வது நாளில் தற்போது பிலடெல்பியாவில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 339 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றதாக துப்பாக்கி வன்முறை ஆவண காப்பக அறிக்கை கூறுகிறது. சமீப காலமாக அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்