15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

எகிப்து - காசாமுனை இடையேயான எல்லை திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-20 22:12 GMT

ஜெருசலேம்,


Live Updates
2023-10-21 15:55 GMT

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது குறித்த பேச்சுக்கு இடமில்லை - ஹமாஸ்

காசாமுனை மற்றும் மேற்குக்கரை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது குறித்த பேச்சுக்கு இடமில்லை என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

2023-10-21 15:49 GMT

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் படைத்தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிந்டி பலியானார். ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவ பிரிவான அல்-குவாசம் பிரிகேடிசின் முக்கிய படைத்தளபதி தலால், அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய காசாவில் உள்ள தலாலில் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-10-21 15:14 GMT

காசா நகரை விட்டு வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் - இஸ்ரேல் அதிரடி

காசாமுனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனிடையே, வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் கடந்த சில நாட்களாக எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், காசா நகரில் இருப்பவர்கள் அல்லது காசா நகருக்கு திரும்பி வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் செல்போனுக்கு வரும் அழைப்பில் இஸ்ரேல் ராணுவம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், காசா நகரை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் பயங்கரவாதிகளின் கூட்டாளிகளாக கருத்தப்படுவர். காசா நகரில் இருப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடம் என இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

2023-10-21 14:42 GMT

காசாவுக்குள் எரிபொருள் கொண்டுசெல்ல அனுமதியில்லை - இஸ்ரேல் திட்டவட்டம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் நிவாரண உதவிக்காக காசாமுனை உடனான ரபா எல்லையை எகிப்து இன்று திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் காசாமுனைக்குள் நுழைந்துள்ளன.

மருந்து, உணவுப்பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவாரண உதவிகளில் காசாவுக்குள் எரிபொருள் கொண்டுசெல்ல அனுமதியில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2023-10-21 13:15 GMT

பலி எண்ணிக்கை:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 800ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

2023-10-21 11:04 GMT

ஹமாஸ் வசம் 210 பிணைக்கைதிகள்:-

இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது பலரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழு வெளிநாட்டினர் உள்பட பலரை பிணைக்கைதிகளாக காசாவுக்கு கடத்தி சென்றுள்ளது. ஹமாஸ் தாக்குதலின் போது மாயமான இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹமாசால் காசா முனைக்கு 210 பேர் பிணைக்கைதிகளாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹமாசால் 210 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஹமாஸ் தன் வசம் இருந்த அமெரிக்காவை சேர்ந்த 2 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 2 பேரும் கடந்த 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் நடந்த தாக்குதலில் ஹமாசால் காசாமுனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்கள் ஆவர். வடக்கு காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழு வலிமையாக உள்ள பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்றார்.

2023-10-21 09:32 GMT

எகிப்து - காசாமுனை எல்லை திறப்பு:- நிவாரண உதவி பொருட்களுடன் நுழைந்த லாரிகள்

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 15வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய உடன் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அதேவேளை, போரின் போது ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வந்தது. இதனால், உலகம் முழுவதில் இருந்தும் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவி பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு ரபா எல்லைப்பகுதியில் எகிப்துக்குள் நிறுத்தபட்டது. எல்லையை திறந்தால் மட்டுமே நிவாரண பொருட்கள் காசா முனைக்கு அனுப்பி வைக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவி வந்தது.

இதனால், காசாவுடனான எல்லையை திறக்க எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தின. மனிதாபிமான உதவிகள் வழங்க எல்லையை திறக்கும்படி எகிப்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, எகிப்து எல்லையை திறந்தால் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டடது.

இந்நிலையில், காசாமுனை உடனான ரபா எல்லையை எகிப்து இன்று திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் காசாமுனைக்குள் நுழைந்துள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாமுனையில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் பெரும் உதவியை அளிக்கும்.

மருந்து, உணவுப்பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து ராபா எல்லை வழியாக காசாமுனைக்கு முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உதவி பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, ரபா எல்லை வழியாக தொடர்ந்து நிவாரண உதவிகளை காசாமுனைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எகிப்து அதிபர் எல் சிசி தெரிவித்துள்ளார். 

2023-10-21 08:18 GMT

பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காசாவில் உள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

2023-10-21 06:18 GMT

காசா மீது இஸ்ரேல் விடிய விடிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்