எகிப்து - காசாமுனை எல்லை திறப்பு:- நிவாரண உதவி... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
எகிப்து - காசாமுனை எல்லை திறப்பு:- நிவாரண உதவி பொருட்களுடன் நுழைந்த லாரிகள்
காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 15வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய உடன் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியது.
இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அதேவேளை, போரின் போது ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வந்தது. இதனால், உலகம் முழுவதில் இருந்தும் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவி பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு ரபா எல்லைப்பகுதியில் எகிப்துக்குள் நிறுத்தபட்டது. எல்லையை திறந்தால் மட்டுமே நிவாரண பொருட்கள் காசா முனைக்கு அனுப்பி வைக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவி வந்தது.
இதனால், காசாவுடனான எல்லையை திறக்க எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தின. மனிதாபிமான உதவிகள் வழங்க எல்லையை திறக்கும்படி எகிப்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, எகிப்து எல்லையை திறந்தால் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டடது.
இந்நிலையில், காசாமுனை உடனான ரபா எல்லையை எகிப்து இன்று திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் காசாமுனைக்குள் நுழைந்துள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாமுனையில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் பெரும் உதவியை அளிக்கும்.
மருந்து, உணவுப்பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இருந்து ராபா எல்லை வழியாக காசாமுனைக்கு முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உதவி பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, ரபா எல்லை வழியாக தொடர்ந்து நிவாரண உதவிகளை காசாமுனைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எகிப்து அதிபர் எல் சிசி தெரிவித்துள்ளார்.