15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

Update:2023-10-21 03:42 IST
Live Updates - Page 2
2023-10-21 01:19 GMT

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்குள் தரைவழியாகவும் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்ட ஹமாஸ் இயக்கத்தினர் சுமார் 200 பேரை  பிணை கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  வெடித்துள்ள தற்போதைய போருக்கு ஹமாசின் இந்த நடவடிக்கையே காரணமாக அமைந்தது. ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருக்கும் காசா மீது உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த போர் 15-வது நாளாக நீடிக்கிறது. போரால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து பிடித்து சென்ற பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 2 பிணை கைதிகளை விடுவித்து இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2023-10-20 23:32 GMT

ஹமாசுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை - ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹமாசின் பயங்கரவாதமும், புதினின் சர்வாதிகாரமும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை. ஆனால் இருவருக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும். ஆகையால் இந்த சூழலில் இத்தகைய போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. எனவே இருநாடுகளுக்கும் வழங்கும் ராணுவ உதவியை கோடிக்கணக்கில் அதிகரிக்க நாடாளுமன்றத்தை நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதை புரியவைப்பேன்.

இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

2023-10-20 23:20 GMT

அதிகரித்து வரும் தாக்குதல்கள் போரை ஒரு பெரிய பிராந்திய மோதலாக விரிவடைய செய்யும் - அமெரிக்கா கவலை

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

அதிகரித்து வரும் இத்தகைய தாக்குதல்கள் இஸ்ரேல் போரை ஒரு பெரிய பிராந்திய மோதலாக விரிவடைய செய்யும் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

2023-10-20 23:10 GMT

இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர்க்கப்பல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. போருக்கு மத்தயில் இஸ்ரேலுக்கு நேரில் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கு தேவையான அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என உறுதியளித்தார்.

முன்னதாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் பிராந்திய அளவில் விரிவடைவதை தடுக்கவும், பிராந்தியத்தில் இருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கவும் ஏதுவாக போர் தொடங்கிய முதல்நாளே அமெரிக்கா மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியது. மேலும் சில போர்க்கப்பல்களை அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்

இந்த நிலையில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை வீசினர்.

ஆனால் அந்த ஏவுகணைகள் இஸ்ரேலை அடைவதற்கு முன்பாக, வடக்கு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்னி என்ற போர்க்கப்பல் அவற்றை சுட்டு வீழ்த்தின. இதன் மூலம் இஸ்ரேல் மீது நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா முறியடித்தது.

2023-10-20 23:03 GMT

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நீடிக்கும் பதற்றம்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு பிறகு காசாவில் உள்ள குடிமக்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கிடையில் லெபனான் எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதன் எதிரொலியாக இஸ்ரேலில் லெபனான் எல்லையோர நகரங்களில் வசித்து வரும் மக்கள் சுமார் 20,000 பேரை இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.

மேற்குகரை மோதலில் 12 பேர் பலி

இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 12 பேரும், இஸ்ரேல் போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே எகிப்து சென்றுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் போரை உடனடியாக நிறுத்தவும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான வழிகளை ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

அதேபோல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று எகிப்து சென்றார். அங்கு அவர் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசியை சந்தித்து போர் நிலவரம் குறித்தும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2023-10-20 22:50 GMT

நிவாரணப் பொருள்களுடன் ரபா எல்லையில் காத்திருக்கும் 200 லாரிகள்

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாவில் இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 12,500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும், சுமார் 1,300 பேர் இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வரும் அதே வேளையில் ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காசாவுக்கு எகிப்து மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளபோதும், வான் தாக்குதல்களில் ரபா எல்லை சாலை மோசமாக சேதமடைந்துள்ளதால் நிவாரணப் பொருள்களுடன் 200 லாரிகள் எல்லையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2023-10-20 22:40 GMT

காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பழமையான தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு

காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலின் அதிர்ச்சியில் மீள்வதற்குள் அங்கு பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பழமையான தேவாலயம் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பயந்து காசா மக்கள் குடும்பம் குடும்பாக வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அந்த வகையில் காசா சிட்டியில் உள்ள மிகவும் பழமையான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த தேவாலயத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் தேவாலயம் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல் இஸ்ரேல் ராணுவத்தால் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு காசாவில் உள்ள ரபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாகவும், இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் ஹமாஸ் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. இப்படி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

2023-10-20 22:14 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே உக்கிரமடையும் போர்: 15-வது நாளாக நீடித்து வருகிறது

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7-ந் தேதி போர் வெடித்தது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. 14 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. இதே நிலையில் தாக்குதல் தொடர்ந்தால் காசாவில் பல்வேறு பகுதிகள் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களாக மாறும் என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத இஸ்ரேல் வான்வழி தாக்குதலுடன், காசா மீது தரைவழி தாக்குதலை தொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி இஸ்ரேல் வீரர்களை அந்த நாட்டு ராணுவ மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த 17-ந் தேதி இரவு காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறி இஸ்ரேல், பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக ஆஸ்பத்திரி மீது விழுந்ததாக குற்றம் சாட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்