இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடாத கிறிஸ்தவர்கள்... பின்னணி தகவல்

இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடாத கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் அதற்கான விளக்கம் அளித்துள்ளனர்.

Update: 2022-12-25 07:53 GMT

ராஞ்சி,

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த தினத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

அவர்கள், தங்களது வீடுகளை விளக்குகளால் ஒளியூட்டியும், கிறிஸ்துமஸ் மரம் வைத்தும், ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள்.

எனினும், இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவில்லை.

 

இதுபற்றிய பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற பெயரிலான கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்ட சிறு பிரிவினர் உள்ளனர்.

அவர்கள் டிசம்பர் 25-ந்தேதி அன்று ஆலயத்தில் குழந்தை ஏசு பற்றி பேசுவதோ மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதோ இல்லை. ஆலயமும் மூடப்பட்டே காணப்படும்.

ஏனெனில் ஏசு கிறிஸ்து டிசம்பர் 25-ந்தேதி பிறந்தவர் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அதனால், வர்த்தக நோக்கிலான கிறிஸ்துமசில் இருந்து விலகி இருந்தபோதும், அவர்கள் ஏசுவின் பிறப்பை இன்னும் வேறு வகையில் கொண்டாடவே செய்கின்றனர். அதற்கான பாடல்களை பாடுகின்றனர்.


 

இந்த பிரிவினர் ஏசுவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் 1863-ம் ஆண்டு உருவான அட்வென்டிஸ்ட் புராடெஸ்டன்ட் பிரிவை சேர்ந்த இந்த அமைப்பின் துணை நிறுவனர்களில் ஒருவரான எல்லன் ஜி ஒயிட் எழுதியுள்ள விசயங்களுக்கு கிறிஸ்தவ ஆலயங்களில் அதிக மதிப்பளிக்கப்படுகிறது.

இதுபற்றி செவன்த்-டே அட்வென்டிஸ்ட் ஆலயத்தின் பாதிரியார் சுஜால் கிஸ்கு கூறும்போது, புதிய ஏற்பாட்டில் மார்க்ஸ், மேத்யூ, லூக் மற்றும் ஜான் எழுதியவற்றில் கிறிஸ்துவின் பிறந்த தேதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

இது ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என தவறாக கொண்டாடப்படுகிறது. பாபிலோனிய வரலாற்றில் நிம்ரோத் என்ற மன்னன் டிசம்பர் 25-ந்தேதி பிறந்தவர்.

பாபிலோனில் இருந்து ரோம் நகருக்கு கிறிஸ்தவம் வந்தடைந்ததும், சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவம் நமது நாட்டு மதம் என அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்பின் கிறிஸ்துவின் பிறந்த தினம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் நடைமுறைக்கு வந்தன என கூறியுள்ளார்.

அந்த காலகட்டத்தில், மக்கள் நிம்ரோத்தின் மனைவி மற்றும் மகனின் சிலைகளை தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் நிறுவ தொடங்கினர். இதனை அன்னை மேரி மற்றும் ஏசு என நினைக்க தொடங்கினர் என கிஸ்கு கூறியுள்ளார்.

இதுபற்றி ராஞ்சி நகரிலுள்ள ஆர்ச்விசன் ஹவுஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, ஒவ்வொருவருக்கும் தங்களது நம்பிக்கைகளை பின்பற்ற உரிமை உள்ளது. வரலாற்றின்படி கடவுள் பிறந்தது எப்போது என நமக்கு தெரியாது.

ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளாக, இந்த தினம் ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மதத்திலும் இதுபோன்று காணப்படுகிறது.

கிருஷ்ணன் எப்போது பிறந்தவர் என ஒருவருக்கும் தெரியாது. ஆனால், இந்துக்கள் ஜென்மாஷ்டமியை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு நம்பிக்கை. அந்த மதநம்பிக்கை நம்மை வழிநடத்தி செல்கிறது.

இது கிறிஸ்தவர்களுடைய பண்டிகை என்றில்லாமல், உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் நாளாக இன்றைய தினம் உள்ளது. இதனை பின்பற்ற வேண்டாம் என சிலர் விரும்பினால், அதற்கான ஒவ்வொரு உரிமையும் அவர்களுக்கு உண்டு என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்