இந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி - 7 பேர் கைது

இந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-09-07 00:54 GMT

Image Courtacy: AFP

ஜகார்த்தா,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு உடல்நல சவால்களுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் முதல் கட்டமாகப் போப் பிரான்சிஸ் இந்தோனேசியா சென்றிருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது 35 ஆண்டுகளில் முதன் முறையாகும். இதனால் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இது கருதப்படுகிறது. இந்தோனேசியா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற போப் பிரான்சிஸ், அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது போப் பிரான்சிஸ் மற்றும் இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமர் இருவரும், மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்

இதனிடையே போப் வருகையை முன்னிட்டு பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போப் ஆண்டவரின் பயணத்தை சீர்குலைக்கவும், அவர் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. இதில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. போப் ஆண்டவர் ஜகார்த்தாவின் இஸ்திக்லால் மசூதிக்கு சென்றதால் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்