சீன பயணிகளுக்கு கொரோனா விதிகளை விதித்தது கனடா; வரும் 5-ந்தேதி முதல் அமல்

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு வரும் 5-ந்தேதி முதல் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கட்டாயம் என கனடா அரசு அறிவித்து உள்ளது.

Update: 2023-01-01 09:39 GMT



ஒட்டாவா,


சீனாவில் 3 ஆண்டுகளுக்கு முன் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு முன்பே 2019 செப்டம்பரில் சில ஐரோப்பிய நாடுகளின் கழிவு நீரில் கொரோனா மாதிரிகள் இருந்துள்ளன என ஆய்வு ஒன்று தெரிவித்தது.

இதன் பின்பு சீனா உடனடியாக, கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனா கொரோனா பிடியில் இருந்து தப்பித்தது.

ஆனால், உலக நாடுகளில் தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த நவம்பரில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது.

சீனாவில் ஊரடங்குக்கு எதிரான மக்கள் போராட்டம் எதிரொலியாக, பூஜ்ய கொரோனா கொள்கையை அரசு தளர்த்தியது.

ஆனால் இதன் பின்னர், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவிய, சீனாவின் அரசு ஆவணங்கள் பற்றி கசிந்த தகவல்களை குறிப்பிட்டு ரேடியோ ப்ரீ ஆசியா தெரிவித்து இருந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என்று அரசு அறிவித்தது. இதனால், சீனாவில் கொரோனா நிலைமை என்னவென வெளியுலகிற்கு தெரிய வராத சூழல் காணப்படுகிறது.

சீனாவில் அதிகரித்து வரும் தொற்றை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முன்பே தொடங்கி விட்டது. இதன்படி, தொற்று அதிகரித்து காணப்படும் நாடுகளான சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடும் இந்த பணியில் இறங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். சீனாவில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அமெரிக்காவும், சீனாவில் இருந்து வர கூடிய பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறும்போது, சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை பற்றி சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்து உள்ளது. அந்நாட்டில், வைரசின் மரபணு தொடர் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட வெளிப்படையான தரவுகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை பற்றி பரிசீலனை மேற்கொண்டது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்றில்லா சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும்.

இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள், வருகிற 5-ந்தேதி முதல் இங்கிலாந்து அரசின் இந்த புதிய கொள்கையின்படி நடந்து கொள்ள வேண்டும்.

ஜப்பானில் கடந்த டிசம்பர் 30-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற நடைமுறை அமலானது.

சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ள சூழலில், கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்துள்ளது.

இதன்படி, சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் தங்களுடன் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான தொற்றில்லா சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை கனடாவை அடிப்படையாக கொண்ட சி.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சீனா, ஹாங்காங் அல்லது மக்காவ் நாடுகளில் இருந்து கனடாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் வருகிற 5-ந்தேதி முதல் கொரோனா தொற்றில்லா சான்றிதழை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும் என அரசு அறிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்