இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு!

சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.

Update: 2022-10-02 01:02 GMT

ஜாவா,

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது.

இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர்.

கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர்.

இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.

சுமார் 180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் அதிக நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

உயிரிழந்தவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள்.34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்