இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்

Update: 2023-10-08 03:11 GMT
Live Updates - Page 2
2023-10-08 05:41 GMT

10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - டெரொட் போலீஸ் நிலையம் மீட்பு

இஸ்ரேலின் தெற்கு நகரமான டெரோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போலீஸ் நிலையத்தின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இன்று காலை வரை நடந்த மோதலில் 10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு டெரொட் போலீஸ் நிலையம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 

2023-10-08 05:10 GMT

காசாவுக்கு வழங்கப்பட்ட குடிநீர், எரிபொருள் இணைப்பை துண்டித்த இஸ்ரேல்

காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா இருளில் மூழ்கியது.

2023-10-08 04:55 GMT

காசாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்; பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த மோசமான நகரத்தில் இருந்து (காசா முனை) ஹமாஸ் நிலைநிறுத்தப்பட்டு, மறைந்திருந்து செயல்பட்டு வருகிறது. அந்த பகுதிகளை நாங்கள் கட்டிட சிதைவுகளாக மாற்றப்போகிறோம். காசாவில் வாழும் மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், அனைத்து பகுதியிலும் நாங்கள் முழு பலத்துடன் செயல்பட உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.  

2023-10-08 04:18 GMT

கடல் வழியாக இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து கடல் வழியாக இஸ்ரேலின் சிகிம் கடற்கரை பகுதிக்குள் நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023-10-08 03:12 GMT

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. நேற்று (அக்.7) காலை முதல் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகரங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய ராணுவ தளத்தையும் கைப்பற்றினர். இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என பலரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர். குறிப்பாக, இஸ்ரேலிய ராணுவ டாங்கிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்கி அதில் இருந்து இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. அதேபோல், இளம்பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடலை நிர்வாணமாக காரில் வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு சென்ற வீடியோவும் வைரலானது. கொல்லப்பட்ட இளம்பெண் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேலிய இளம் பெண்ணை பைக்கில் ஹமாஸ் அமைப்பினர் கடத்தி செல்லும் வீடியோவும் வைரலானது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 300 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலின் எல்லையோர நகரங்களில் சில பகுதிகளை ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர்.

மேலும், இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் இடையேயான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் - காசா இடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்