பிரான்சில் போராட்டக்காரரை போலீஸ் அதிகாரி தாக்கும் வீடியோ வெளியானது; விசாரணைக்கு உத்தரவு

பிரான்சில் போராட்டக்காரரை போலீஸ் அதிகாரி தாக்கும் வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-01-31 02:09 GMT
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளை படம் பிடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அளிக்கும் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.  அராஜகத்தில் ஈடுபடும் சம்பவங்களில் போலீசாரை படம் பிடிக்கும் பத்திரிகையாளர்களை இந்த மசோதா தடுக்கும் என கூறப்பட்டது.

இதனால் அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் மற்றும் பேரணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டம் நேற்றும் நடந்தது.  இதில் 32 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  அவர்களில் பாரீஸ் நகரில் இருந்து 5 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த பேரணியில் ஆயுதமில்லாத போராட்டக்காரர் ஒருவரை பாரீஸ் நகர போலீஸ் அதிகாரி தாக்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டது.  அதுபற்றிய 2 வீடியோக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  இதனை தொடர்ந்து, போராட்டக்காரரை தாக்கிய போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆவேசத்தில் போலீசாரை  நோக்கி பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வீசி எறிந்தனர்.

இதனால் 2 போலீஸ் அதிகாரிகள் லேசாக காயமடைந்து உள்ளனர்.  போராட்டக்காரர்களில் 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 28 பேர் பாரீஸ் நகரை சேர்ந்தவர்கள் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்