பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா-அமெரிக்கா கூட்டு அறிக்கை

பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2019-12-20 22:27 GMT
வாஷிங்டன்,

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் அனுமதி வழங்கியதன்பேரில் இரு நாடுகள் இடையேயான முதலாவது பேச்சுவார்த்தை டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பெர் மற்றும் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்கள் இந்தியா-அமெரிக்கா இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தையை வாஷிங்டனில் நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு எதிராக எந்த பயங்கரவாத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக, உறுதியான, பின்வாங்காத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பை, பதான்கோட் உள்ளிட்ட எல்லைதாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்கொய்தா, ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹக்கானி நெட்வொர்க், ஹிஜ்புல் முஜாகிதீன், தெரிக் இ தலீபான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் குழு உள்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்