குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-12-20 22:15 GMT
வாஷிங்டன்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இல்லினாய் மாகாணம் சிகாகோ நகரில் உள்ள டிரிப்யூன் டவர் என்ற இடத்தில் இருந்து இந்திய தூதரகம் வரை 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல் மசாசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகர் போஸ்டனில் உள்ள எம்.ஐ.டி. முன்பு கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என பல்வேறு துறைகளை 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்