காஷ்மீர் குறித்த கருத்தை திரும்பப் பெறப்போவது இல்லை -மலேசிய பிரதமர் சொல்கிறார்

காஷ்மீர் குறித்த கருத்தை திரும்பப் பெறப்போவது இல்லை என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-22 13:23 GMT
கோலாலம்பூர்,

காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்திய  அரசின் நடவடிக்கையால், பாகிஸ்தான் கடும் அதிருப்தி அடைந்ததோடு உலக நாடுகளின் ஆதரவை திரட்ட முயன்றது. ஆனால், எந்த ஆதரவும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு கிட்டவில்லை. 

அதேவேளையில்,  மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, “இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து ஆக்கிரமித்துள்ளதாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து தெரிவித்தார். மலேசிய பிரதமரின் கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்தது.  இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை  குறைக்க அரசு திட்டமிட்டது.

மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   அரசின் இந்த முடிவுக்கு இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிகம் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கும் இந்தியா, இறக்குமதியை  நிறுத்தும் பட்சத்தில் அந்நாட்டின் வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலாக பேசப்படுகிறது. 

இந்த நிலையில், இது குறித்து பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று  தெரிவித்துள்ளார். மகாதீர் முகம்மது கூறுகையில், “ நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை.  எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஏற்படும் தாக்கம் பற்றி நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்றார். 

மேலும் செய்திகள்