துருக்கியில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி

துருக்கியில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலியாகினர்.

Update: 2019-07-19 18:31 GMT
அங்காரா,

உள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் துருக்கி சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இந்த நிலையில் துருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஓஸ்ப் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்