ஏற்காட்டில் கோடை விழா ஏற்பாடுகள் தொடக்கம்

ஏற்காட்டில் கோடை விழா ஏற்பாடுகள் நேற்று தொடங்கி உள்ளன. இதையொட்டி 4 லட்சம் மலர் செடிகள் வளா்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-28 19:30 GMT

ஏற்காடு:-

ஏற்காட்டில் கோடை விழா ஏற்பாடுகள் நேற்று தொடங்கி உள்ளன. இதையொட்டி 4 லட்சம் மலர் செடிகள் வளா்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்காடு மலர் கண்காட்சி

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டு, 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி நேற்று ஏற்காடு ேராஜா தோட்டத்தில் மலர் படுக்கையில் 4 லட்சம் மலர் விதைகள் விதைக்கப்பட்டு பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிக அளவிலான மலர் செடிகள் மற்றும் மலர்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.

தற்போது கோடை காலம் முன்னதாக தொடங்க உள்ள நிலையில் மலர் செடிகளை பராமரிக்க கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடாரங்களுக்குள் மலர் செடிகளை வைத்து பராமரித்து பின்னர் காட்சிக்கு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்த...

மேலும் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து டேலியா கிழங்குகள் வரவழைக்கப்பட்டு விதைத்து காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கோடை விழாவை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சியில், 15 ஆயிரம் மலர் தட்டிகளில் சுமார் 2 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா மற்றும் அண்ணா பூங்கா ஆகிய இடங்களில் புல் தரைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துக்குள் அனைத்து மலர் செடிகள் மற்றும் புல் தரைகள் கோடை விழாவிற்கு தயாராகி விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் இருந்து...

இது குறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இதற்காக லட்சக்கணக்கில் மலர் செடிகள் தேவை என்பதால் அதற்கான நடவுப்பணிகளை தொடங்கி உள்ளோம். குறிப்பாக கொய்மலர்கள் எனப்படும் அலங்கார மலர்ச்செடிகளான டெனியா, ஆப்ரிக்கன் மேரிகோல்ட், ஜினியா, காஸ்மஸ், கிரைசாந்திமம், பெட்டுனியா, சால்வியா, கோழிக்கொண்டை, பால்சம், வின்கர், கேலண்டுலா, பிராஞ்ச் மேரிகோல்ட், கலர் குட்டை சால்வியா, ஆன்ட்ரியம், டையாந்தஷ், ஆஷ்டர், பெகோனியா, பேன்சி, செலோசியஸ், ஹோலிஹாக், பிலாக்ஸ், சூரியகாந்தி, ஸ்டாக் என 6 லட்சம் செடிகள் பதியம் போடப்படும் பணி ெதாடங்கி முதற்கட்டமாக நேற்று 4 லட்சம் விதைகள் விதைக்கப்பட்டு உள்ளன.

மேலும் டேலியா வகை மலர்களை உருவாக்கும் வகையில், ஒரு லட்சம் டேலியா மலர் நாற்றுகள் விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன. இதுதவிர ரோஜா தோட்டத்திலும் பலவகை ேராஜா செடிகளை கொண்ட தோட்டத்தை உருவாக்க 4 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்